சென்னை – அண்ணாநகர்

சென்னை அண்ணாநகரில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் 84 -வது ஆண்டு விழா மற்றும் மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை IGF அருகே உள்ள RPF பரேடு மைதானத்தில் 12 ஜோதிர்லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்க தரிசனக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு தமிழக, தென் கேரள, பாண்டிச்சேரி, சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா, அடையாறு மூத்த இராஜயோக ஆசிரியை பி.கே.முத்துமணி, சைதாப்பேட்டை பொறுப்புச் சகோதரி பி.கே.தேவி, அண்ணாநகர் சகோதரி பி.கே.ஜான்சிராணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். முக்கிய விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் திரு.பொன்னையன், திருமதி.கோகுல இந்திரா, அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மோகன், நகைச்சுவை நடிகர் திரு.செந்தில் ஆகியோர் கலந்து கொடி ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் திரு பொன்னையன் பனிலிங்க குகையைத் திறந்துவைத்தார். முன்னாள் IAS அதிகாரி சிவகுமார் சுவாமிகளுடன் முக்கிய விருந்தினர்கள் இணைந்து பொதுமக்கள் தியானம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கை விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் பென்னையன் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரம்மா குமாரிகள் இயக்கத்தில் பல ஆண்டுகள் தொடர்பில் இருப்பதாகவும் அபுமலை சென்று சிறப்புப் பயிற்சி பெற்றதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்கள். மேலும் மதங்கள் ஜாதிகள் எதுவாக இருந்தாலும் இறைவன் ஒருவர் என்ற தத்துவத்தை பிரம்மா குமாரிகள் அமைப்பு வலியுறுத்துகிறது என்று கூறினார்.
மேலும் இக்கண்காட்சியில் “என் தமிழ் நாடு போதையற்ற தமிழ்நாடு” என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு அரங்கம், இளைஞர்கள் முன்னேறுவதற்குரிய வழிகளைக் கூறும் அரங்கம், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பைக் கூறும் அரங்கம், தண்ணீரின் இன்றியமையாமை மற்றும் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் அரங்கம் மற்றும் புத்தக அரங்கம், தேவிகள் தரிசனக் காட்சிகள், கைலாயக் காட்சிகள் ஏற்பாடு செய்திருந்தன. முதல் நாள் அன்று நீதியரசர் திரு.வள்ளிநாயகம், நீதியரசர் திரு.பாலசுப்ரமணியம், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் பார்வையிட்டு சென்றனர். அனேக பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து பார்வையிட்டு சென்றனர்.